மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள மூன்று வைத்தியசாலைகள் இலங்கை மின்சார சபைக்கு 08 கோடி ரூபாவிற்கும் அதிகமான மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரியவந்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் வைத்தியசாலைகளின் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இது தொடர்பான கடிதம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலை, எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலை மற்றும் தெலிகம மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றில் இருந்து பெற வேண்டிய நிலுவைத் தொகை எட்டு கோடி அறுபத்து மூன்று இலட்சத்து நாலாயிரத்து நானூற்று பன்னிரெண்டு ரூபாய் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு 6 கணக்கு இலக்கங்களில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுவதாகவும், அந்தக் கணக்குகள் அனைத்திற்கும் இதுவரையில் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணம் ஆறு கோடியே எழுபத்தேழு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரத்து ஐநூற்றி முப்பத்தைந்து ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையின் நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணம் ஒரு கோடியே தொண்ணூறு லட்சத்து பதினோராயிரத்து அறுநூற்று தொண்ணூற்று நான்கு ரூபாவாகும் அதேவேளை, தெலிகம மாவட்ட வைத்தியசாலையின் மின் கட்டணம் ஐந்து லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து நூற்றி எண்பத்தி நான்கு ரூபாவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.