fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சார்ஜாவில் புதையுண்ட கிராமத்தை மீள்சீரமைக்க நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 6, 2023 11:34

சார்ஜாவில்  புதையுண்ட கிராமத்தை மீள்சீரமைக்க   நடவடிக்கை

சார்ஜா வானொலி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி பங்கேற்று பொதுமக்களிடம் நேரடியாக பேசுவது வழக்கம்.

வானொலி நிகழ்ச்சியில் நேற்று ஆட்சியாளர் பங்கேற்று பேசும்போது, பொதுமக்கள் ஒருவர் சார்ஜாவின் மதாம் அருகில் நாங்கள் வாழ்ந்த குரைபா கிராமத்தை மறுசீரமைத்து கொடுக்க வேண்டும்.

அந்த கிராமம் மணல் புயல் தாக்கி புதையுண்ட பகுதியாக காட்சியளிக்கிறது.  அதனை மறுசீரமைத்து கொடுத்தால் மீண்டும் அந்த பகுதியில் எங்களது வாழ்க்கை தொடர உதவியாக இருக்கும் என கோரிக்கை விடுத்தார்.  இந்த கோரிக்கையை தொடர்ந்து ஆட்சியாளர் அந்த புதையுண்ட கிராமத்தை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைதொடர்ந்து கிராமப் பகுதியில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சார்ஜாவின் புதையுண்ட கிராமம் குறித்த விவரம் வருமாறு,

சார்ஜாவில் கடந்த 1 லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மனிதர்கள் வாழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் தொல்பொருள் ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அப்படி பழம்பெருமை வாய்ந்த பகுதியில் ஆச்சர்யங்களும், மர்மங்களும் இருப்பது இயல்பாகவே உள்ளது.  துபாயில் இருந்து 60 கி.மீ மற்றும் சார்ஜாவில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது அல் மதாம் என்ற பாலைவன பகுதி.

இங்கு இருந்து தென்மேற்கு பகுதியில் சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளதுதான் குரபா கிராமம்.  ஒரு காலத்தில் அழகிய கிராமமாக விளங்கிய இந்த பகுதியில் தற்போது மனித நடமாட்டமே இல்லை என்பதுதான் மர்மமுடிச்சாக உள்ளது.

ஏனென்றால் தற்போது இந்த முழு கிராமமே மணலில் புதையுண்டு கிடக்கிறது.  மணலில் புதையுண்ட கட்டிடங்களின் மேற்கூரை மட்டுமே தெரிகிறது.  கடந்த

1970-ம் ஆண்டு மற்றும் 1980-ம் ஆண்டுகளில் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் இந்த கிராமத்தின் கட்டிடங்கள் அரசால் கட்டி தரப்பட்டுள்ளது.

ஆனால் அடுத்த 10 ஆண்டுகள் மட்டுமே அந்த கிராம மக்களின் வாழ்க்கை நிம்மதியாக இருந்துள்ளது. அதன் பிறகு அந்த பகுதியில் தொடர்ந்து மணல் புயல் வீச தொடங்கியது.

பிறகு வெள்ளம் வருவது போல் வீடுகளில், கட்டிடங்களில் மணல் புயல் தாக்கியது.  இதனால் அந்த கிராமம் முழுவதும் மணலில் புதையுண்டது.  அந்த கிராம மக்கள் தங்கள் குடும்பத்தினருடன்  அந்த ஊரை விட்டு காலி செய்துவிட்டனர்.

இன்று அந்த பகுதிக்கு சென்றால் மணலில் மூழ்கிய வீடுகள் மற்றும் கட்டிடங்களை பார்க்கலாம்.  மேலும் அன்று வாழ்ந்த மக்கள் விட்டு சென்ற பொருட்களும் அப்படியே சேதமடைந்து உள்ளது.

தற்போது இந்த பகுதி சுற்றுலா பயணிகள் சென்று சுற்றிபார்க்கும் இடமாக மாறியுள்ளது.  பகலில் இந்த பகுதிக்கு வாகனங்களில் செல்வோர் இரவில் செல்வதில்லை. இப்படி மர்மம் நிறைந்த கிராமமாக இருந்த இந்த பகுதிக்கு தற்போது ஆட்சியாளரின் உத்தரவு மூலம் புதுவாழ்வு கிடைத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 6, 2023 11:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க