நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை இன்று முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனிடையே, நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுகளுக்கு நேற்று(05) மாலை விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும்(06) நாளையும்(07) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நிலவும் மழையுடன் கூடிய வானிலையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நுவரெலியா மாவட்ட வலயக் கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றிரவு(05) இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொடை பிரதேச செயலக பிரிவிற்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வட மத்திய மாகாணங்களிலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 45 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இடி, மின்னலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ள தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.