அமெரிக்காவின் கொலராடா மாகாணம் கிரிலே புறநகர் பகுதியான தென் வேர் என்ற இடத்தில் வசித்து வந்தவர் லில்லி சில்லா (வயது 15) இவருக்கும் ஜோவனி சிரியோ (17) என்பவருக்கும் காதல் மலர்ந்தது.
இருவரும் கடந்த 6 மாதங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் லில்லி சில்வா தனது காதலை திடீரென முறித்தார். தன்னை இனி சந்திக்காதே என காதலனிடம் கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜோவனிசிரியோ பல முறை காதலியை சந்தித்து பேச முயன்றார். ஆனால் லில்லி சில்வா அவருடன் பேச மறுத்து விட்டார். இது அவருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று ஜோவனி சிரியோ காதலி வீட்டுக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை வெளியில் நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்றார். அங்கு படுக்கை அறையில் இருந்த லில்லி சில்வாவை நோக்கி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஆத்திரம் தீர சரமாரியாக சுட்டார்.
அந்த சமயம் பக்கத்து அறையில் லில்லியின் 13 வயதான தம்பி டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தான். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அவன் அங்கு ஓடி வந்தான். அங்கு தனது அக்கா சுடப்படுவதை பார்த்து அதிர்ச்சி அடைந் தார்.
உடலில் பல இடங்களில் குண்டு பாய்ந்த லில்லி சில்வா ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். சிறிது நேரத்தில் அவர் இறந்தார். உடனே ஜோவனி சிரியோ காதலியின் தம்பியிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி விட்டார்.
இதனால் அந்த சிறுவனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது. இது பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக ஜோவனி சிரியோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட லில்லி சில்வா கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.