உள்ளுராட்சி மன்ற தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற தீர்மானம்
Related Articles
உள்ளுராட்சி மன்ற தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள யோசனை குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தமது அமைச்சின் சட்டப்பிரிவிற்கு அறிவித்துள்ளதாக உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தற்போது நீதிமன்றில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபரின் பரிந்துரையை பெற்றுக்கொண்டதன் பின்னர், அதனை அமைச்சின் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்யுமாறு, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் சிலரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
தேவையேற்பட்டால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தனிநபர் பிரேரணையாக பாராளுமன்றத்தில் சமர்பிக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் தலைமையில் அண்மையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனைக்குழு கூட்டத்தின் போது, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வது தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.