இளம் பெண்களை ஏமாற்றி அவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து மிரட்டி பணம் பறித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகநூல் ஊடாக இளம் பெண்களை அடையாளம் கண்டுகொண்ட சந்தேக நபர் அவர்களுடன் காதல் உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
பின்னர் , அவர்களை ஹோட்டல் அறைகளுக்கு அழைத்துச் சென்று நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காண்பித்து சம்பந்தப்பட்ட இளம் பெண்களை பயமுறுத்தி, தாம் கேட்ட பணத்தை தராவிட்டால் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இவ்வாறு, அவிசாவளை பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவருடன் காதல் உறவை வளர்த்துக் கொண்ட குறித்த சந்தேக நபர், அந்த யுவதியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார்.
பின்னர் அவரை பயமுறுத்தி சுமார் 2 லட்சம் ரூபாயை பறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தன்னிடம் இருந்து பலமுறை பணம் கேட்டு மிரட்டியதால், இது தொடர்பாக பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவில் அந்த யுவதி முறைப்பாடு செய்துள்ளார் .
இதற்கமைய சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட போது அவரின் நவீன கையடக்கத் தொலைபேசியை ஆய்வு செய்ததில் அவர் பல இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை எடுத்திருந்தமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.