சட்டவிரோதமான போதைப்பொருளை பாவித்து வாகனம் செலுத்துவோரை கைதுசெய்வதற்காக நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கை ஒகஸ்ட் 01ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேல் மாகாணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான போதைப் பொருட்களை பாவித்து வாகனம் செலுத்திய 41 சாரதிகள் இனங்காணப்பட்டதோடு, அவர்களில் 19 பேர் பஸ் சாரதிகளாவர்.
நாட்டில் இடம்பெறும் விபத்துக்களில் பெரும்பாலானவை சட்டவிரோதமான போதைப் பொருட்களை பாவித்து வாகனம் செலுத்துபவர்களினால் ஏற்படுவதாக சந்தேகிக்கும் பொலிஸார், நாட்டில் பதிவாகும் விபத்துக்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
2020ஆம் ஆண்டில் 23,704 விபத்துக்களில் மொத்தம் 2,370 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், 2021ஆம் ஆண்டில் 22,847 விபத்துக்களில் 2,559 பேர் உயிரிழந்துள்ளனர். 2022ஆம் ஆண்டில் 21,992 விபத்துக்களில் மொத்தம் 2,536 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டு (2023) ஜனவரி 1 முதல் ஜூன் 18 வரை 8.875 விபத்துகளில் மொத்தம் 1,043 பேர் இறந்துள்ளனர்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும், சட்டவிரோதமான போதைப்பொருளை உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காணும் முறைமை அவர்களிடம் இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், தற்போது தேவையான நடவடிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், சட்டவிரோதமான போதைப் பொருட்களை பாவித்து வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
கடந்த ஜூன் 12ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையில் வாகனம் செலுத்தியவர்களைக் கண்டறியும் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 1,781 நபர்கள் பரிசோதிக்கப்பட்டு 41 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதிகளில் 09 பேர் முச்சக்கர வண்டி சாரதிகளும் 13 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் அடங்குகின்றனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட 7 சாரதிகள் விடுவிக்கப்பட்டதோடு, 15 சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மேலும் இரு சாரதிகளுக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.