பிரேசில் நாட்டில் ஏற்பட்ட சூறாவளியால் பாரிய பாதிப்பு
Related Articles
பிரேசில் நாட்டில் Rio Grande do Sul மாநிலத்தில் புயல் காரணமாக கடும் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறாவளிக்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தது. இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்ததால் ரோடுகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்பு குழுவினர் விரைந்து சென்று படகு மூலம் மீட்டனர்.
வெள்ளத்தில் சிக்கிய 3,713 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர். 20க்கும் மேற்பட்டவர்களை வெள்ளம் அடித்து சென்றது. அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் அதிரடியாக மீட்கப்பட்டனர்.
இந்த சூறாவளி புயலுக்கு 4 மாத குழந்தை உள்பட 13 பேர் பலியாகிவிட்டனர், 20க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி விட்டனர். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை, அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்துவிட்டனர். அவர்கள் அங்குள்ள விளையாட்டு மைதானங்களில் தற்காலிமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பலர் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு விட்டதால் உயிர்சேதம் பெருமளவில் இல்லாமல் தடுக்கப்பட்டது.