வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
வவுனியா கண்ணாட்டி பகுதியில் இன்று டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பறையநலாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 7 மணியளவில் பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்தபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த டிப்பர் ரக வாகனம் வீதியை விட்டு இறங்கி பாதை ஓரத்தில் நின்றவர்கள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் அதேபகுதியைச் சேர்ந்த சிவலோகநாதன் சுபோகினி வயது 36, டினுசிகா வயது 6 என்ற இருவரே உயிரிழந்துள்ளனர்.
குறித்த டிப்பர் ரக வாகனத்தில் மூவர் பயணித்திருந்த நிலையில், விபத்தை அடுத்து அவர்களில் ஒருவர் தப்பிச்சென்றுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஏனைய இருவரையும் ஊர்மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பிரதேச மக்கள் டிப்பர் ரக வாகனத்தைத் தாக்கி சேதப்படுத்தியதுடன் அதனை எரிப்பதற்கு முயற்சித்ததால், அப்பகுதியில் குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்ததுடன் மன்னார் வீதியில் போக்குவரத்தும் சில மணிநேரங்கள் பாதிக்கப்பட்டது.
எனினும் நிலமையைக் கட்டுப்படுத்தியதுடன் விபத்துத் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.