அண்மைய காலங்களில் நாட்டின் பல்வேறு பாகங்களில் பதிவாகி வரும் பொலிஸ் காவலின் கீழான உயிரிழப்புச் சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கின்ற, தமதுபணியை உரியவாறு நிறைவேற்றுவதற்குத் தவறுகின்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக வலுவான சட்டங்களை நடை முறைப்படுத்துமாறும், கடுமையான தண்டனைகளை வழங்குமாறும்
அச்சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் மீள இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான வழிகாட்டல்களை த் தயாரிக்குமாறும்,
மக்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிக்கையொன்றின் ஊடாக சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் சட்ட முறைமையானது விசாரணை , வழக்குத்தொடுப்பு, தண்டனை வழங்கல் ஆகியவற்றை முன்னெடுப்பதற்கு உரியவாறான அதிகாரங்களை வழங்கியிருக்கின்றது. அதுவே ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியி ன் அடிப்படை என்பதுடன் அச்செயன்முறை மீதான
நம்பகத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் பாதுகாக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும்.
அரசியலமைப்பின் பிரகாரம் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்குக்கூட உயிர்வாழ்வதற்கான உரிமை உண்டு. பொலிஸ்காவலின் கீழான சந்தேகநபரின் உயிரிழப்பு அல்லது சட்டவிரோத படுகொலை என்பன உயிர்வாழ்வதற்கான உரிமையை மீறுகின்றது என்ற நிலைப்பாட்டை இலங்கையின் நீதி மன்றங்கள் தொடர்ச்சியாகப் பேணியிருக்கின்றன என்று சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இலங்கையில் பொலிஸ்காவலின்கீழ் இடம்பெறும் உயிரிழப்புக்கள் மற்றும் சித்திரவதைகள் என்பன கரிசனைக்குரிய மட்டத்தில் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகத் தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் சங்கம், மக்களி ன் உரிமைகளைப் பாதுகாப்பது மாத்திரம் அரசின் கடமையல்ல.
மாறாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான இழப்பீட்டை வழங்குவதும், சட்டத்தை மீறுபவர்களைத் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்’ என்று வலியுறுத்தியுள்ளது.