அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற ஹார்வர்டு மருத்துவ கல்லூரியில், பிணவறை மேலாளர் ஒத்துழைப்புடன் நீண்ட காலமாக நடந்து வந்திருக்கும் மனித உடலுறுப்புகள் திருட்டு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்வர்டு மருத்துவ கல்லூரிக்கு தானமாக கொடுக்கப்படும் இறந்தவர்களின் உடல்களிலிருந்து உடலுறுப்புகளை திருடி விற்றதாக 5 பேர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் என்றும் அதில் ஒருவர் அந்த கல்லூரி பிணவறை மேலாளர் என்றும் அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
பென்சில்வேனியாவின் மத்திய மாவட்டத்திற்கான அமெரிக்க அட்டர்னி அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 6ம் திகதி வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட செட்ரிக் லாட்ஜ் (55), குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவர்களுடன் சேர்ந்து 2018ம் வருடத்திலிருந்து 2022 வரை உடலுறுப்புகளுக்கான ஒரு கருப்பு சந்தையையே நடத்தி வந்துள்ளார்.
மாசச்சூசெட்ஸ் மாநிலத்தின் போஸ்டனிலுள்ள ஹார்வர்டில் 1995 வேலைக்கு லாட்ஜ் அமர்த்தப்பட்டதாகவும், உடலுறுப்புகளை வாங்க விரும்புபவர்களை பிணவறைக்குள்ளேயே அனுமதித்து உடல்களை பார்வையிட வைத்துள்ளது.
பிணவறையில் இருந்து பெற்ற உடலுறுப்புகளை அவர்கள் மறுவிற்பனை செய்து விட்டனர். அர்கன்ஸாஸ் மாவட்டத்தில் இதே விசாரணையில் 6வதாக ஒரு பெண் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்” என கூறப்பட்டுள்ளது.
லாட்ஜ் தன் மனைவி டென்னிஸ் (63) உடன் வசித்து வந்த நிலையில், சில உடல் பாகங்களை தன் வீட்டுக்கே கொண்டு சென்று விடுவார் என்றும், அவற்றை வாங்க விரும்பும் சிலருக்கு பாகங்களை தபாலில் அனுப்பிவிடுவார் என தெரிவித்தனர்.
குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் லாட்ஜிற்கும் அவர் மனைவிக்கும் பிரதிநிதிகளாக வாதாட வழக்கறிஞர் உதவி கிடைக்கப்பட்டிருக்கிறதா என தெரியவில்லை. இதுகுறித்து மத்திய புலனாய்வு நிறுவனம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
சதிவேலை மற்றும் மாநிலங்களுக்கிடையேயான பொருள் திருட்டு குற்றங்களுக்காக லாட்ஜ் மற்றும் அவர் மனைவியுடன், மாசச்சூசெட்ஸ் மாநிலத்தின் சலேம் பகுதியைச் சேர்ந்த கேத்ரினா மெக்லீன் (44), பென்ஸில்வேனியா மாநிலத்தின் மேற்கு லான் பகுதியைச் சேர்ந்த ஜோஷுவா டேலர் (46), மற்றும் மின்னஸோட்டா மாநிலத்தின் கிழக்கு பெத்தல் பகுதியைச் சேர்ந்த மேத்யூ லம்பி (52) ஆகியோரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
இவர்கள் நாடு முழுவதும் பலருடன் கூட்டாக ஹார்வர்டு மருத்துவ பள்ளியிலிருந்தும், அர்கன்ஸாஸிலுள்ள பிணவறையிலிருந்தும் உடல் உறுப்புகள் வாங்கி விற்பதில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளங்களின் மூலமாகவும் தொலைபேசி வழியாகவும் லாட்ஜும் அவர் மனைவியும் பிறருக்கு விற்றுள்ளனர்.
இவ்வழக்கிற்காக, நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்திலுள்ள கன்கார்ட் மத்திய நீதிமன்றத்திற்கு முதல்முறையாக வந்த டெனிஸ் லாட்ஜ், கருத்து எதுவும் கூற மறுத்து விட்டார். இது குறித்து அமெரிக்க வழக்கறிஞர் ஜெரார்ட் கரம் தெரிவித்துள்ள கருத்துதானது சில குற்றங்கள் நம்மால் புரிந்து கொள்ள முடியாதவை.
மனிதர்களின் உடல் பாகங்களை திருடி விற்பது நம்மை மனிதர்களாக்குவது எதுவோ அந்த அடிப்படையையே ஆட்டம் காணச் செய்யும் செயலாகும்.
ஹார்வர்ட் மருத்துவத்துறை டீன் ஜார்ஜ் டேலி, “எங்கள் கல்லூரி வளாகத்தில் இப்படியொரு சம்பவம் நடைபெற்றதாக அறிந்து நாங்கள் பெரிதும் அதிர்ந்திருக்கிறோம். எந்தெந்த உடல் நன்கொடையாளர்களின் உடலுறுப்புகள் திருடப்பட்டுள்ளன என கண்டறிய மார்ச் மாதம் இந்த குற்றஞ்சாட்டு எழுந்தவுடன் எங்கள் பதிவுகளில், லாட்ஜ் வளாகத்தில் இருந்த நாட்களையும், தானமளிப்போரின் எஞ்சிய உடல் பாகங்கள் எரியூட்டலுக்காக அனுப்பப்பட்ட நாட்களையும் பற்றிய குறிப்புகளை ஆராய்ந்தோம்” என குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமாக ஹார்வர்ட் மருத்துவ பள்ளிக்கு தானமாக வழங்கப்படும் உடல்கள், கல்விக்கும், மருத்துவ ஆய்விற்கும் பயன்படுத்தப்டும் என்றும் அவைகளுக்கான தேவை முடிந்ததும், எரியூட்டப்படும் அல்லது புதைக்கப்படும் என தெரிகிறது.