ஐக்கிய மக்கள் சக்தியின் மனுவை மீள அழைக்க உத்தரவு
Related Articles
பதவிக்காலம் நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அவற்றின் அதிகாரங்களை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வௌியிடப்பட்ட கடிதம் மீளப் பெறப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளாா்.
பொது நிர்வாக செயலாளரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு உத்தரவிடக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருன ஆகியோர் தாக்கல் செய்த ரிட் மனு இன்று(13) மேன்முறையீட்டு நீதிமன்றில் பாிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, சமா்ப்பணங்களை முன்வைத்து, பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட கடிதம் மீளப்பெறப்பட்டதாக நீதிமன்றில் அறிவித்துள்ளாா்.
குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் புதிய கடிதம் ஒன்றை வெளியிடுவதற்கான செயற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக அரசாங்க சட்டத்தரணி தெரிவித்துள்ளாா்.
எவ்வாறாயினும், மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஃபர்மான் காசிம், இந்த மனுவை தாக்கல் செய்த பின்னரே குறித்த கடிதம் நீக்கப்பட்டதாகவும், எனவே இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாற கோரிக்கை விடுத்தார்.
அதன்படி, இந்த மனுவை எதிா்வரும் 26ஆம் திகதி மீள அழைப்பதற்கு உத்தரவிடப்பட்டது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக பிரதமர் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.