வீதி விபத்துகளை தடுக்க யாழில் விசேட வேலைத்திட்டம்
Related Articles
வீதி விபத்துகளை தடுக்கும் நோக்கில், யாழ் மாவட்டத்தில், இன்று முதல் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக மாவட்ட பிரதிக்பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்கள் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்தபோது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இந்த மாதத்தில் மாத்திரம் 10 இற்கும் மேற்பட்ட வீதி விபத்துகள் இடம்பெற்ற நிலையில், 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று முதல், யாழ்ப்பாணத்தில், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரை உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வீதி விபத்துக்கள் ஏற்படக்கூடியவாறு, மஞ்சள் கடவைக்கு அண்மையில் வாகனங்களை நிறுத்துதல், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துதல், வேகமாக வாகனங்களை செலுத்துதல் மற்றும் தலைக்கவசம் இன்றி உந்துருளிகளை செலுத்துவோருக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில், 80 வீதமானவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறியே தமது வழமையான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸாருக்கும் பணிபுரிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், போக்குவரத்து விதிமுறைகளை உரியவாறு கடைப்பிடிப்பதன் மூலம், விபத்துகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிக் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.