சமூக வலைத்தளம் தொடர்பான தகராரொன்றில் பெண் ஒருவரை கடுமையாக காயப்படுத்திய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சமூக ஊடகங்கள் ஊடாக தனது வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு வேறொரு பெண்ணின் புகைப்படத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்பட்ட பெண்ணின் காதலன் அதுருகிரியவைச் சேர்ந்த பெண்ணுடன் தொடர்பு கொண்டு அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
குறித்த இளைஞன் தனது நண்பர்கள் மூவருடன் ஹோட்டலுக்கு வந்துள்ளதுடன், தனது காதலியையும் அவரது தாயுடன் ஹோட்டலுக்கு வருமாறு அறிவித்துள்ளார்.
அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண், மற்றுமொரு ஆணுடன் ஹோட்டலுக்கு வந்து இளைஞர்களுடன் உரையாடலில் ஈடுபட்டிருந்த நிலையில், எந்த பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டு இச்செயலில் ஈடுபட்டாரோ அந்த பெண் அவ்விடத்திற்கு வந்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான பெண் தாம் வந்த ஆணுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற நிலையில், குறித்த இளைஞர் தனது நண்பர்கள் இருவருடன் பின்னால் காரில் துரத்திச் சென்று விபத்தை ஏற்படுத்தியதில் பெண் படுகாயமடைந்துள்ளார்.
பலத்த காயங்களுக்கு உள்ளான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 மற்றும் 22 வயதுடைய அத்துருகிரிய மற்றும் ஹோமாகம பிரதேசத்தில் வசிப்பவர்கள் மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 2023 மே 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சமூக ஊடக சர்ச்சைகளை கைகளில் எடுப்பதை தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதுருகிரியவில் இடம்பெற்ற சம்பவத்தை மேற்கோள்காட்டி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவா, எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன்னர் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.