திரை ஆளுமை மனோபாலாவின் இறுதிப்பயணம்
Related Articles
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என சிறந்து விளங்கிய மனோபாலாவின் இழப்பு ஈடு செய்யமுடியாதது. திரைக்காட்சிகளில் அவரது முகபாவனையும், உடல்மொழியும் ரசிகர்கள் மத்தியில் அவரது நகைச்சுவை உணர்வுக்கு அதிகம் வலு சேர்த்து எனலாம்.
நடிகர் கமல்ஹாசன் பரிந்துரையில், இயக்குநர் பாரதிராஜாவிடம் ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்த மனோபாலா, கார்த்திக் நடித்த ‘ஆகாய கங்கை’ படம் மூலம் இயக்குநர் ஆனார்.
தொடர்ந்து மோகன் நடிப்பில் பிள்ளை நிலா படத்தை இயக்கினார். அதன்பிறகு சிறைப்பறவை, ரஜினி நடித்த ஊர்க்காவலன் , விஜயகாந்த் நடித்த என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் , சத்யராஜ் நடித்த மல்லுவேட்டி மைனர் , ஜெயராம் நடித்த நைனா உட்பட 24 படங்களை இயக்கியுள்ளார்.
அத்துடன் சதுரங்கவேட்டை 1,2 , பாம்புச் சட்டை போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.
300க்கும் அதிகமான திரைப்படங்களில் நகைச்சுவை , குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் சிறிய வேடங்களில் நடித்து வந்த மனோபாலா , கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ‘நட்புக்காக’ படத்துக்குப் பிறகு முழு நேர நடிகரானார்.
பிதாமகன், பாய்ஸ், காதல் கிறுக்கன், பேரழகன், கஜினி, தலைநகரம், இம்சை அரசன் 23ம் புலிகேசி, சந்திரமுகி, கலகலப்பு உட்பட பல படங்களில் அவர் நடிப்பு பேசப்பட்டது.
சிவாஜி, தொடங்கி இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுடனும் நடித்துள்ளார். சில சின்னத்திரைத் தொடர்களை இயக்கியுள்ள அவர், அதிலும் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக யூடியூப்பிலும் பிரபலங்களை நேர்கானல் செய்து வந்தார்.
தொடர்ச்சியாக படப்பிடிப்புகளில் கலந்துகொண்டிருந்த மனோபாலா, கடந்த 15 நாட்களாக கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில் மனோபாலா நேற்று திடீரென மரணம் அடைந்தார்.
மறைந்த மனோபாலாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை சாலிகிராமம் எல்.வி.சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்தது .
உடலுக்கு திரையுலகினர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி சடங்குகள் வளசரவாக்கம் மயானத்தில் இன்று இடம்பெறுகிறது.