மஹரகம பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தர மற்றும் நாளாந்த மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை இடைநிறுத்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற மஹரகம பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இசை நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கு நாளாந்தம் வழங்கப்படும் கலால் அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை இடைநிறுத்தவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மஹரகம பிரதேசத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன் சமூக நலத்திட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அரசின் புதிய சமூக நலத் திட்டத்திற்கு 13,377 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 2,560 பேரின் தொடர்புடைய தகவல்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளன என்பதும் தெரியவந்தது. சமூக நலத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துமாறு பிரதமர் மேலும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சுகாதாரத் துறையின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், உள்ளூர் சுகாதார வைத்திய அதிகாரிகளின் பற்றாக்குறையும் வெளிப்படுத்தப்பட்டது. பொரலஸ்கமுவ குளம் புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து நகர சபையிடம் கையளிக்கப்படாமை தொடர்பில் மீள் கவனம் செலுத்தி இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.