வீதி உணவுகளை விற்பனை செய்வதற்கு உரிய முறைமை தயாரிக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் தற்போது பிரபலமாக உள்ள இந்த தெருவோர உணவகங்கள் பல நாடுகளில் பிரபலமான முறையாகும் என்றார்.
அந்த உணவகங்களை அகற்றாது, அதற்கான முறையான அமைப்பை தயார் செய்வோம் என்றார். மாதிவெல கிம்புலாவல பகுதியில் உள்ள வீதி உணவகங்களை அகற்றுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவினால் கேட்கப்பட்ட வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, சில வீதி உணவு கடைகள் தொடர்பில் பயணிகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
பயணிகளுக்கும் வாகனங்களுக்கும் வீதி தடைபடாத வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.