சுதந்திர தினத்தை முன்னிட்டு தொல்பொருட்கள் மற்றும் ஆவணங்களின் கண்காட்சி
Related Articles
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தொல்பொருட்கள் மற்றும் ஆவணங்களின் கண்காட்சி பெப்ரவரி 4 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் திறக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் இந்த கண்காட்சியை இலவசமாக பார்வையிட பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று புத்த சாசனம் மற்றும் மத அலுவல்கள் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன குறிப்பிட்டார்.
இந்த கண்காட்சி தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (01) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த விழா மைதானத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை பிரதி எடுத்து வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய கலாச்சார நிதியத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஓவியங்கள், சுவரோவியங்கள், சிற்பங்கள் போன்றன விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கலாசார அமைச்சின் பல்வேறு திணைக்களங்களின் ஊடாக, பல்வேறு பாடங்களில் பெருமளவிலான புத்தகங்களை அச்சிட்டு மக்களுக்கு சலுகை விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செயலாளர் வலியுறுத்தினார்.
பாடசாலைக் கல்வி, கலாசார விழுமியங்கள், அதன் மூலம், கல்வி எவ்வாறு ஆன்மீக ரீதியில் கட்டமைக்கப்படுகிறது என்பது பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வகையில் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி இந்தக் கண்காட்சி நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வருட சமய நிகழ்ச்சிகளும் சிறப்பாக இடம்பெற்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.