பன்முக நாயகி வாணி ஜெயராம்
Related Articles
ஐந்து தசாப்தங்களாக தன் தனித்துவக் குரலால் இசை ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்திய பாடகி வாணி ஜெயராம் தனது 78வது வயதில் மரணமாகியுள்ளார். சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் இன்று அவரது வீட்டில் நெற்றியில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இசை உலகத்தில் மகத்தான சாதனைகளை படைத்த கலை ஆளுமையின் மரணம் பேரதிர்ச்சியே. வாணிஜெயராமிற்கு இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது கடந்த நாட்களில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னணி பாடகி வாணி ஜெயராமை பொறுத்தவரையில் தமிழ், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மராத்தி, ஒடிசா உள்ளிட்ட 19 பன்மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பதிவு செய்துள்ளார்.
கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட வாணி ஜெயராம் தமிழ் நாடு வேலூரில் 1945 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி பிறந்தவர்.
இசை குடும்பத்தில் பிறந்தவர். தாய் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றவர் 3 வயதிலேயே ராகங்களை கண்டறிவதில் திறமை படைத்தவராக வாணிஜெயராம் திகழ்ந்துள்ளார்.
இவர் பிறந்து 11வது நாளில் பெயர் சூட்டும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது தாயிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விழா தடைபட்டுள்ளது. இது குறித்து அவரது மிகவும் வருந்தியுள்ளார். இந்நிலையில் தான் அவரது தந்தை ஒர் ஜோசியரிடம் வாணியின் ஜாதகத்தை காண்பித்துள்ளார். அதற்கு ஜோசியர், ” இந்த குழந்தையை பற்றிக் கவலைபட வேண்டாம். போன ஜென்மத்தில் பழநியாண்டவருக்கு தேனாபிஷேகம் செய்துள்ளார். பெரியப்பாடகி ஆகி அனைவரும் அறியப்படுபவராவார். இவருக்கு “கலைவாணி” என்று பெயர் வையுங்கள் என்று கூறியுள்ளார். அவர் கூறியதற்கு இணங்க வாணி ஜெயராம் இசை பற்றிய நுணுக்கங்களை கற்றுக்கொண்டு இசையில் தேர்ச்சிபெறலானார்.
வாணி ஜெயராமின் இசை திறமையால் சிறுவயது முதலே ஆல் இந்தியாவானொலியில் பாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். பல மேடை நிகழ்ச்சிகள் என அவரது இளமைக்காலம் இசையால் இனிமை பெற்றது. கல்லூரிப்படிப்பு முடிந்து மூன்றரை வருடங்கள் வங்கியில் பணிபுரிந்துள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவர் தொழில் செய்துகொண்டிருந்த மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளார். இந்நிலையில் இவரது இசைத்திறமையை பார்த்து கணவர் ஜெயராம், இந்துஸ்தானி இசையை கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தியுள்ளார். அதன் பிறகு திறமையான ஒரு குருவிடம் வாணி பயிற்சி பெற்றுள்ளார். அந்த குருவின் அறிவுரையின் படி வங்கி வேலையை கைவிட்டு 17 , 18 மணிநேரம் முழுநேரமும் இசை பயிற்சிக்காய் தன்னை அர்பணித்துள்ளார். அந்த அர்ப்பணிப்பு தான் அவரை சிறந்த பாடகியாக்கியது.


இசைப்புயல், வாணிஜெயராம்
1971 (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசையில் 3 பாடல்களை பாடி திரைவாழ்க்கையை ஆரம்பித்தார். அறிமுகப் பாடல் பதிவே அவருக்கு நல்ல அங்கீகாரத்தை இசைத்துறையில் பெற்றுக்கொடுத்தது. அடுத்தடுத்து ஹிந்தி திரைப்படங்களில் பல பாடல் சந்தர்ப்பங்கள் வாணியை தேடி வந்தது.
இவ்வாறான நிலையில், மும்பையில் பாடியப்பாடல்களை சென்னையில் மியூசிக் Acedamyல் தொகுத்து வழங்க வாணி ஜெயராம் வந்த சந்தர்ப்பத்தில் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடுவின் அறிமுகம் வாணிக்கு கிடைத்துள்ளது. இதன் போது “தாயும் சேயும் ” திரைப்படத்தில் தமிழில் பாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார். ஆனால் படம் வெளிவரவில்லை. இந்நேரத்தில் தான் 1973 ஆம் ஆண்டு சலீல் சவ்த்ரியின் மலையாள திரைப்படமான ஸ்வப்னம் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு வாணிக்கு கிடைத்து, மலையாள சினிமாவிலும் அவருக்கு நற்பெயரை கொடுத்தது. அத்துடன் அதே ஆண்டு மீண்டும் தமிழில் “வீட்டுக்கு வந்த மருமகள்” திரைப்படத்தில் சங்கர் கணேஷ் இசையில் TM சவுந்தர் ராஜன் உடன் இணைந்து “ஓர் இடம் உன்னிடம்” என்ற பாடலை பாடினார். அதன் பிறகான காலப்பகுதியில் சங்கர் கணேஷ் இசையில் பல பாடல்களை பதிவு செய்வதற்கான வாய்ப்பை பெற்றார்.
வாணி ஜெயராம் எத்தனை பாடல்களை பாடியிருந்தாலும் இந்த ஒரு பாட்டு அவருக்கான மிகப்பெரிய அங்கீகாரம் எனலாம், அதுதான் “மல்லிகை என் மன்னன் மயங்கும்” பாடல் . தீர்க்கசுமங்கலி திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையில் வாலியின் வரிகளில் வாணியின் குரலில் மதிமயக்கும் பாடலாய் பதியப்பட்டது. குறிப்பாக தீர்க்க சுமங்கலி திரைப்படம் வெளியாகும் முன்பே “மல்லிகை என் மன்னன் மயங்கும்” பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது. இப்பாடலானது திரைப்படத்தை அனைவர் மத்தியிலும் கொண்டு சேர்ப்பதற்கான விளம்பரமாகவும் அமைந்தது எனலாம்.
விருது என்பது ஓர் கலைஞனுக்கான மிகப்பெரிய அங்கீகாரம் அந்த அடிப்படையில் 1975 ம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் அபூர்வராகங்கள் திரைப்படத்தில் msv இசையில் வாணிஜெயராம் பாடிய ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடல் முதல் தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது.
இப்பாடலை பொறுத்தவரையில் msv பாடல் பதிவின் போதே கூறியுள்ளார், “இந்த பாடலை சிறப்பாக பாடியிருக்கீங்கம்மா, உங்களுக்கு விருது கிடைக்கும்” என , அதற்கேற்றாற் போலவே தேசிய விருது வாணிஜெயராம் வசமாகியது.


வாணி ஜெயராம் ,அமிதாப் பச்சன்
அதனை தொடர்ந்து 1980 ம் ஆண்டு ‘சங்கராபரணம்’ தெலுங்கு பட பாடலுக்கும் , 1991 ம் ஆண்டு “ஸ்வாதி கிரணம்” என்ற தெலுங்கு பட பாடலுக்கும் தேசிய விருது பெற்றார். அத்துடன் “filmfare” , மாநில விருதுகள் உட்பட்ட பல விருதுகளும் இவரின் திறமையை மேலும் மிளிர செய்தன.
தொழில் நுட்ப வசதிகள் குறைவாய் இருந்த காலத்திலேயே ஒரே தடவையில் பாடல்களை பாடி பதிவு செய்த திறன் படைத்தவர்.
பாடுவது மட்டுமன்றி தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் கவிதைகள் வடிப்பது பக்தி பாடல்கள் எழுதி இசை அமைப்பது, அத்துடன் ஹிந்தி மொழியிலும் பாடல்களை எழுதி இசையமைத்து மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். இத்தனை இசை ஞானம் இருந்தும் மனித நேயத்தோடு சக கலைஞர்களை மதித்து மற்ற கலைஞர்களை மனதார பாராட்டும் மனம் கொண்டவர்.
என்றும் கொண்டாடப்படவேண்டிய ஆளுமை வாணி ஜெயராம்.