புதிய கலப்பின அந்தூரியம் மற்றும் அன்னாசி வகைகள் அறிமுகம்
Related Articles
குளியாபிட்டிய மாகந்துர விவசாய ஆராய்ச்சி நிறுவனம் 44 புதிய கலப்பின அந்தூரியம் இனங்களையும் இரண்டு அன்னாசி வகைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த 44 அந்தூரியம் இனங்களுக்கு மேலதிகமாக மேலும் இரண்டு அந்தூரியம் இனங்களுக்கு லங்கா பியூட்டி மற்றும் லங்கா குமாரி என பெயரிடப்பட்டுள்ளதாக மாகந்துறை விவசாய ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அன்னாசி வகைகளுக்கு இன்னும் பெயர்கள் முன்மொழியப்படவில்லை.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (30) மாகந்துறை விவசாய ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சென்று அதன் ஆராய்ச்சியின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.
அந்தூரியம் பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு புதிய இனங்களை அறிமுகப்படுத்தும் ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளதாகவும், அந்த ஆராய்ச்சியின் படி 44 புதிய கலப்பின வகைகளை உற்பத்தி செய்ய முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அந்தூரியம் இனங்களின் முக்கிய பண்புகள் அந்தூரியம் பூக்களின் பிரகாசமான நிறங்கள் மற்றும் பூவின் நீண்ட ஆயுள். சுமார் ஒரு வாரமாக பூக்கள் மங்காது, நிறம் மாறவில்லை என ஆய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை இல்லத்தரசிகள் மத்தியில் அந்தூரியம் பயிர்ச்செய்கை மிகவும் பிரசித்தி பெற்றதுடன், வீட்டில் இருந்தே பணம் சம்பாதிப்பதற்கான சுயதொழிலாக அந்தூரியம் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியும் என்பதால், இந்த புதிய ரகங்களை விரைவில் நாட்டுக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.