கொடிகாமம் மிருசுவில் வடக்கு பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். அவர் தனது வயல் நிலத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். திடீரென மோட்டார் சைக்கிள் கவிழந்ததால், அவர் தரையில் வீழ்ந்துள்ளார். குறித்த சந்தர்ப்பத்தில் அவர் வைத்திருந்த கட்டுத்துவக்கு இயங்கியதால் காயமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. மிருசுவில் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை மாவனெல்ல பகுதியில் உயர் அழுத்த நீர்குழாய் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் ஹெம்மாத்தகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயர்அழுத்த நீர் குழாயின் அழுத்த எல்லையை நீர்வழங்கல் வடிகாலமைப்புக்கு சொந்தமான நிறுவனமொன்று பரிசோதித்த போதே நீர்குழாய் வெடித்துள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியூடாக பயணித்த 68 வயதான நபரொருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.