கறுப்புப்பட்டி போராட்டத்தில் வைத்தியர்கள்..
Related Articles
மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யுமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் முதல் கறுப்பு வாரத்தை அறிவித்துள்ளது. வைத்தியர்கள் கறுப்பு பட்டியணிந்து இன்றைய தினம் கடமைக்கு சமூகமளித்துள்ளனர். நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் கறுப்பு வாரம் இன்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அழுத்கே தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு வளாகத்தில் கறுப்பு கொடிகள் ஏற்றப்பட்டுள்ளதோடு பொதுமக்களிடமிருந்து கையெழுத்து சேகரிக்கும் செயற்பாடு ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் எந்த இடத்திலும் நோயாளர்களின் கண்ணீரையே வைத்தியர்கள் பார்வையிடவேண்டியுள்ளதாக வைத்தியர் ஹரித்த அழுத்கே குறிப்பிட்டுள்ளார்.
நீரிழிவு நோயாளர்களுக்கான இன்சுலீன் மற்றும் மெட்போமின் மருந்துகளுக்கான தட்டுப்பாடு தேசிய வைத்தியசாலையில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் வைத்தியசாலைகளில் மருந்து இன்மையால் தாம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக குறிப்பிடுகின்றனர். மருந்துகளை கொள்வனவு செய்யும் போது கூடுதல் விலையில் அவற்றை கொள்வனவு செய்ய வேண்டி ஏற்படுவதாகவும் தமது வாழ்க்கை செலவீனத்திற்கு மத்தியில் மருந்துகளை கொள்வனவு செய்ய முடியாத பாரிய நெருக்கடியை எதிர்க்கொண்டுவருவதாக நோயாளர்கள் குறிப்பிடுகின்றனர்.