உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
Related Articles
கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைகள் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் 17ம் திகதி வரை பரீட்சைகள் நடைப்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 2 ஆயிரத்து 200 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் 3 இலட்சத்து 31 ஆயிரத்து 709 பரீட்சார்த்திகள் பரீட்சைகளில் தோற்றுவதற்கு தகமை பெற்றுள்ளனர். அவர்களில் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 196 பாடசாலை ரீதியான பரீட்சார்த்திகளும், 53 ஆயிரத்து 513 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றனர். விசேட தேவையுடைய 263 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்கு தோற்றுவதாகவும், மெகசீன் சிறைச்சாலையில் பரீட்சை மத்திய நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்கைள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு பரீட்சை மத்திய நிலையங்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, 317 பரீட்சை இணைப்பு மத்திய நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. சகல பொலிஸ் நிலையங்களின் ஊடாகவும் நடமாடும் பொலிஸ் வாகன சேவை ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு செல்லும் மாணவர்களின் நலன் கருதி இலங்கை புகையிரத திணைக்களம், இலங்கை போக்குவரத்து திணைக்களம் என்பன ஒன்றிணைந்த போக்குவரத்து செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளன. ஆயிரத்து 617 சிசுசெரிய பஸ் வண்டிகள் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. இன்றைய தினம் முதல் மேலதிக 16 ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை பரீட்சை நடவடிக்கைளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுத்துச்செல்லுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.