கொழும்பு கொம்பனி வீதியிலுள்ள பிரபல உணவகமொன்றில் நடத்தப்பட்ட போதைப்பொருளை விருந்தை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். உணவகத்தின் 30வது மாடியில் விருந்து நடத்தப்பட்டுள்ளது. போதைப்பொருளுடன் யுவதியொருவர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கொக்கெய்ன், குஷ் போன்ற போதைப்பொருட்களும், டான்சிங் எனப்படும் போதை மாத்திரையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
போதை விருந்துக்கு பேஸ்புக் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை கேள்வியுற்ற பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் விருந்தை சுற்றிவளைக்க கோட்டை நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்றனர். சிவில் உடை தரித்த பொலிஸார் விருந்தை சுற்றிவளைத்தபோது பெரும்பாலான இளைஞர், யுவதிகள் போதையில் இருந்ததாக தெரியவந்தது. விருந்தில் பங்கேற்பதற்காக ஒருவரிடமிருந்து 5 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்பட்டுள்ளது.
மதுபான போத்தலொன்று 30 ஆயிரம் ரூபாவுக்கும் அதிக தொகையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு கிரேம் கொக்கெய்ன் போதைப்பொருள் 50 ஆயிரம் ரூபாவுக்கும், போதை மாத்திரையொன்று 5 ஆயிரம் ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள முக்கிய கோடீஸ்வரர்களின் பிள்ளைகளே போதை விருந்தில் கலந்துகொண்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.