தசுன் ஷானக்க போராட்டக்குணத்தை வெளிப்படுத்தியபோதும் 67 ஓட்டங்களினால் இந்திய அணிக்கு வெற்றி
Related Articles
சுற்றுலா இலங்கை அணிகளுக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. குவஹாட்டியில் இடம்பெற்ற நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கியது. துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக காணப்பட்ட ஆடுகள தன்மையை பயன்படுத்திக்கொண்ட இந்திய துடுப்பாட்ட வீரர்கள், இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களை சிறப்பான முறையில் எதிர்கொண்டு 373 ஓட்டங்களை 50 ஓவர்களில் குவித்தனர். இந்திய அணியின் 7 விக்கட்டுக்கள் வீழ்த்தப்பட்டன. விராட் கோஹ்லி சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 45வது சதத்தை பூர்த்திசெய்தார். தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் அவர் பெற்றுக்கொண்ட இரண்டாவது சதம் இதுவாகும். ரோஹித் சர்மா 83 ஓட்டங்களையும், சுப்மன் கில் 70 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் கசுன் ராஜித 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார். 374 எனும் கடினமான இலக்கு இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இலங்கை அணி விக்கட்டுக்களை இழந்து தடுமாற்றங்களை எதிர்கொண்டது. ஒரு முனையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அணி தலைவர் தசுன் ஷானக்க விக்கட்டை தக்கவைத்துக்கொண்டு தலைமைத்துவ இனிங்ஸை முன்னெடுத்திருந்தார். 88 பந்துகளில் ஆட்டமிழக்காது 108 ஓட்;டங்களை தனக்கே உரிய பாணியில் பெற்றார். தசுன் ஷானக்க ஒருநாள் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை பதிவுசெய்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் உம்ரான் மாலிக் 3 விக்கட்டுக்களையும், மொஹமட் சிராஜ் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர். போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் விராட் கோஹ்லி தெரிவுசெய்யப்பட்டார். இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தா ஈர்டன் கார்டன் மைதானத்தில் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.