இந்தியாவுக்கு எதிரான 2ஆவது போட்டியில் இலங்கைக்கு அபார வெற்றி..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 6, 2023 09:48

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது போட்டியில் இலங்கைக்கு அபார வெற்றி..

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ருவென்றி – 20 போட்டியில் இலங்கையணி அபார வெற்றியீட்டியுள்ளது. போட்டி நேற்றிரவு பூனே சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை பெற்றது. அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் தசுன் சானக , 22 பந்துகளுக்கு முகங்கொடுத்து 6 சிக்சர்கள் அடங்கலாக 56 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். குசல் மென்டிஸ் 52 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் உம்ரான் மாலிக் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு 207 ஓட்டங்களை வெற்றியிலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9.1 ஓவர் நிறைவில் 57 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்து தடுமாறியது. சூர்யகுமார் யாதவ்வும், அக்ஸார் பட்டேலும் அணியை சரிவிலிருந்து மீட்டபோதிலும் வெற்றியிலக்கை எட்டமுடியவில்லை. இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அக்ஸார் பட்டேல் 65 ஒட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் தசுன் ஷானக, கசுன் ரஜித மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் தலா இரு விக்கட்டுகளை கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகனாக தசுன் ஷானக தெரிவானார். தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. மூன்றாவது போட்டி நாளை இரவு 7 மணிக்கு ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 6, 2023 09:48