அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு யோசனைக்கு அமைச்சரவை அனுமதி…
Related Articles
அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், திணைக்களம், சபைகள் என்பன நட்டத்தில் இயங்கும் நிலையில் அவற்றை இலாபமீட்டும் நிறுவனங்களாக மறுசீரமைக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பெரும்பாலான அரச நிறுவனங்கள் நட்டமடையும் நிலையில், அவற்றின் சுமை பொதுமக்களை சென்றடைவதாகவும், அதனை மாற்றியமைக்கவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றியமைப்பதற்கான யோசனை நிபுணர்கள் குழவினால் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும், அவற்றை துரிதப்படுத்துவதற்காக 2022 இடைக்கால வரவு செலவு திட்டத்தினூடாக ஜனாதிபதியினால் அரச நிறுவன மறுசீரமைப்பு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை, தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். மறுசீரமைப்பு நடவடிக்கையின்போது நூற்றுக்கு 100 வீதம் திறைச்சேரிக்கு உரிமை காணப்படும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.