நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி கொள்கையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுடன் விசேட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொழில் வல்லுனர்களுக்கும், நிதி இராஜாங்க அமைச்சருக்குமிடையிலான பேச்சுவார்த்தையின்போது தமது பிரச்சினைகள் குறித்து தெளிவாக அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக தொழில் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
புதிய வரி கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன்போது ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், அதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டுசெல்வதற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இணக்கம் தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம், இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம், பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம், ஒன்றிணைந்த நிறைவேற்று அதிகாரிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட தொழிற்துறையினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தன. வரி கொள்கைகள் நியாயமானதாக காணப்படும் பட்சத்தில் வரி செலுத்துவதற்கு தயாரென்ற தமது நிலைப்பாட்டை சுட்டிக்காட்டியதாகவும், முறையற்ற வரி அறவீட்டுக்கு தாம் தயாரில்லையெனவும் தொழிற்துறை வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.