பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு கம்பஹா மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த குழுவை அமைக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கல்வி அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பாடசாலை வளாகங்களில் போதைப்பொருள் வர்த்தகம் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருளை விற்பனை செய்யும் நபர்களை கண்டறிவது முக்கிய பொறுப்பாக காணப்படுகிறது.
போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கம்பஹா பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது வலியுறுத்தினார். இதற்கென பாடசாலைகளில் போதைப்பொருள் தடுப்பு மேற்பார்வை குழுக்களை அமைக்கும் பணியை விரைவில் நிறைவு செய்யுமாறு அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் வார இறுதியில் மேலதிக வகுப்புகளுக்கென சுமார் 15 ஆயிரம் பேர் கம்பஹா நகருக்கு வருகை தருவதாக கம்பஹா நகர மேயர் எரங்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அவர்களை போதைப்பொருள் வர்த்தகத்தில் உள்வாங்குவதற்கு பல்வேறு குழுக்கள் செயற்பட்டு வருவதால் , மேலதிக வகுப்பு இடம்பெறும் பகுதிகளிலும் கண்காணிப்பு குழுக்களை அமைக்க இதன்போது தீர்மானம் மேற்கொள்ப்பட்டது.