அரசியல் கைதிகளை விடுவித்தல் மற்றும் வடக்கு கிழக்கு காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கிடையில் ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. இதன்போது ஐந்து பேரை முதலில் விடுதலை செய்ய முடியும். ஏனையவர்களை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபரின் பரிந்துரை கிடைக்கப்பெறுமெனவும், அதனை முன்னெடுக்கும் விதம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 3ம் திகதி தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது பரிந்துரைகள் வழங்கப்பட்டு அதற்கு அனுமதி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. ஏனைய இடப்பிரச்சினை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். பிரதமர் தினேஸ் குணவர்தன, நீதியமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.