இயற்கையின் விசித்திரம் தூக்கணாங்குருவி (Baya Weaver)
Related Articles
இறைவனின் படைப்பில் பறவைகளும் அதிசயம் தான். ஆச்சரியமூட்டும் அம்சங்களோடு பல பறவைகள் இப்புவிப்பரப்பில் வாழ்கின்றன. அவற்றில் ஒன்றுதான் தூக்கணாங்குருவி
இது ஊர்க்குருவி இனத்தை சேர்ந்த ஒரு பறவை. அளவிலும் உடலமைப்பிலும் இது ஊர்க்குருவியை ஒத்திருக்கும். ஆனால் இதன் மேல் தலை, மார்பு ஆகியன மஞ்சளாக இருக்கும். வயல்வெளி போன்ற இடங்களில் இது திரள்களாகக் கூடி வாழும். முட்டையிடும் காலங்களில் இது மஞ்சள், கருப்பு நிறங்களைப் பெற்றிருக்கும்.
இக்குருவிகளின் கலைநயமிக்க செயற்பாடானது மனிதர்களுக்கே சவால்விடுக்கும் வகையில் அமைகிறது எனலாம். குறிப்பாக தூக்கணாங்குருவிகளின் கூடுகள் மற்ற பறவைகளோடு ஒப்பிடும் போது மிகவும் மாறுபட்டது.
தென்னை ஈச்சை போன்ற மரங்களின் கிளைகளின் நுனிப்பகுதியில் கூம்புவடிவில் கூடுகளை அமைக்கின்றன.
காரணம் முட்டைகளையும் குஞ்சுகளையும் பிற விலங்குகளிடமிருந்து காப்பாற்ற, அதுவும் தர்ப்பை புல்லைகொண்டே வேய்கின்றன. தர்ப்பையானது தண்ணீரையும் வெப்பத்தையும் உறிஞ்சும் தன்மைகொண்டதல்ல. ஆனால் தண்ணீர் இல்லாவிட்டாலும் பல நாட்கள் வாடாது. நீர் நிலையில் தோய்ந்தே இருந்தாலும் அழுகாது. இந்தப் புல் உலர்ந்து போனாலும் இதன் வீரியம் குறையாது. உறுதியாக தாக்கு பிடிக்கும் என்பதால் கூட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்துகின்றன.
ஆண்குருவிகளே பெண்குருவிகளின் ரசனைக்கேற்ப கூடுகளை சுமார் 18 நாட்களில் தனித்தனி அறைகளாக அமைகின்றன. இருப்பினும் பெண்பறவைகளுக்கு பிடித்தால் மாத்திரமே அவற்றில் தங்குமாம்.
அதுவும் பருவநிலை மாற்றங்களை கருத்திற்கொண்டு காற்றடிக்கும் திசைக்கேற்ப கூட்டின் நுழைவுவாயிலை தூக்கணாங்குருவி அமைக்கும்.
கூடானது ஒளிர்வு பெற களிமண்ணை ஆங்காங்கே வைத்து அவற்றுக்குள் ஏராளமான மின்மினிப்பூச்சிகளை பதித்து விடுகிறது இவ்வாறான செயற்பாடுகளால் தூக்கணாங்குருவியானது ரசனைமிக்க படைப்பாளியாகவே பார்க்கப்படுகிறது.