இலங்கைக்கு 16 மில்லியன் யூரோக்களை நிதியுதவியாக வழங்க ஐரோப்பிய சங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பசுமை கொள்கை ஊடாக யதார்த்தமான இலங்கை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அமைதியான சமூகத்தை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் நிதியுதவி வழங்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை வலுப்படுத்தும் திட்டம் மற்றும் பசுமை கொள்கை கருத்துக்களை எளிதாக்கும் திட்டத்தை செயற்படுத்த 16 மில்லியன் யூரோக்கல் நிதியுதவியாக வழங்கப்படவுள்ளது. அதன் அடிப்படையில் நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை இந்தியாவின் உதவி திட்டத்தின் கீழ் அதிகளவான பாதிப்புக்களை எதிர்க்கொண்டுள்ள சமூக அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ஒரு உப திட்டத்திற்கான செலவு 300 மில்லியன் இலங்கை ரூபாவாக வரையறுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னெடுக்கப்படும் முழுமையான திட்டத்தின் பெறுமதி உயர்ந்தபட்சம் 5 பில்லியன் இலங்கை ரூபாவிற்கு வரையறுக்கப்பட்டுள்ளது. எனினும் நாட்டில் நிலவும் சூழலுக்கு மத்தியில் திட்டத்திற்கான செலவை 600 மில்லியன் ரூபா வரை அதிகரிக்கவும், முழு செலவை 10 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கவும் இரு தரப்பும் இணக்கம் வெளியிட்டுள்ளன. அதற்கமைய இரு நாடுகளுக்கிடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.