கோழிகளுக்கான தீவனங்களின் விலை உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பினால் கோழி பண்ணைகள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளதாக வெலிமட குருத்தலாவ பிரதேச பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர் கோழி பண்ணைகளை முன்னெடுத்துச்செல்ல வேண்டுமாக இருந்தால் அரசாங்கத்தின் தலையீடு அவசியமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோழி தீவனங்களின் விலை அதிகரிப்பு, எரிபொருள் நெருக்கடி மற்றும் அவற்றுக்கு வழங்கப்படும் விட்டமின்களின் விலை அதிகரிப்பு பிரச்சினைகளினால் தாம் தமது தொழிற்துறை நெருக்கடிகளை சந்தித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கோழி தீவனம் ஒரு மூடை 15 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரசாங்கம் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்துள்ளதன் ஊடாக மேலும் நெருக்கடியை முட்டை உற்பத்தியாளர்கள் எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தமது தொழிற்துறையில் எழுந்துள்ள நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.