தரமற்ற திரவ சேதன உரத்தை விநியோகித்த உர நிறுவனம் ஒன்று கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு விவசாய துறை அமைச்சர் தேசிய உர செயலகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். சேதன திரவ உரத்தை பிளாஸ்டிக் போத்தல்களில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நிறுவனம் அதனை மீறி விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
பிளாஸ்டிக் போத்தல்களில் திரவ உரத்தை பொதியிடுவதால் பல்வேறு தீங்குகள் ஏற்படுவதாக ஆய்வுகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே குறித்த உர விநியோக நிறுவனம் கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட வேண்டுமெனவும், குறித்த உரத்தை விற்பனை செய்திருந்தால் அதற்கான பணத்தை செலுத்த வேண்டாமெனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார். அத்தோடு வலவ்வ வலையத்தை சேர்ந்த உர நிறுவனம் ஒன்று அதிக மணலை உள்ளடக்கி உர உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் இம்முறை நெற் பயிர்செய்கைக்கு சேதன பசளை விநியோகிக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடாதெனவும், உரிய நிறுவனங்களில் கம நல சேவை மத்திய நிலையங்களின் ஊடாக தமது உற்பத்திகளை விவசாயிகளுக்கு வழங்க முடியுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.