மண் மற்றும் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளமையினால் இரண்டு வீதிகளுடனான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்ல- வெல்லவாய வீதி மற்றும் பசறை – லுனகல ஆகியவற்றின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையினால் எல்ல வெல்லவாய வீதியின் 12ம் கட்டை பிரதேசத்தில் கற்பாறை மற்றும் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. வீதியை அண்மித்த பகுதியில் காணப்படும் மண் தடுப்பு சரிந்து வீழ்ந்துள்ளது. இந்நிலையில் குறித்த வீதியுடனான போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒருவழி போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் மழையுடன் காலநிலை நீடிக்கும் பட்சத்தில் குறித்த பகுதியில் மண்மேடு சரிந்து வீழுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஏ5 வீதியின் பசறை – லுனகலைக்கு இடைப்பட்ட ஹொக்டன் அம்பலாங்கொடை பிரதேசத்தில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண்மேடு அகற்றப்படும் வரை தற்காலிகமாக பசறை, லுனகலைக்கு இடையிலான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிக மழையுடன் கூடிய காலநிலையினால் கண்டி தாதியர் கல்லூரியின் ஒரு பகுதியில் மண்மேடு சரிந்து விழக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. கல்லூரியின் அதிபரின் உத்தியோகபூர்வ வீடு, தாதியர் பயிற்சி முன்மாதிரி அறை, விஞ்ஞான ஆய்வுகூடத்தை அண்மித்த பகுதி , வாகன தரிப்பிடம் மற்றும் கேட்போர் கூடம் அமைந்துள்ள பகுதி என்பன மண்சரிவு அபாயத்தை எதிர்க்கொண்டுள்ளதாக அங்குள்ள பயிற்றுவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கட்டிடம் அமையப்பெற்றுள்ள காணிக்கு கீழ் பிரதேசத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.