22 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரம் அடங்கிய 2வது கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. உரத்தை தரையிறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாயதுறை அமைச்சு தெரிவித்துள்ளது. இம்முறை பெரும்போகத்தில் நெல் மற்றும் சோள பயிர்ச்செய்கைக்காக யூரியா உரத்தை கொள்வனவு செய்ய உலக வங்கி 105 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் உதவியாக வழங்க அனுமதியளித்துள்ளது.
ஏற்கனவே 13 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரம் நாட்டுக்கு கிடைக்கப்பெற்றிருந்தது. இம்முறை பெரும்போக செய்கைக்காக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரம் தேவைப்படும் நிலையில் இதுவரை 35 ஆயிரம் மெட்ரிக் தொன் வரை நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. எதிர்வரும் 28ம் திகதி மேலும் ஒரு தொகை யூரியா நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.