தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக கூறி பணம் திரட்டிய இரண்டு சந்தேக நபர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குருநாகல் நகரிலுள்ள பிரபல இடமொன்றில் இளைஞர், யுவதிகளை திரட்டி தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக பணம் திரட்டப்பட்டுள்ளமை தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்று இளைஞர்களை ஒன்றுதிரட்டிய இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுள்ளனர். தொழில்வாய்ப்புக்களுக்கான முன்பதிவை மேற்கொள்வதற்கு ஆயிரத்து 500 ரூபா பதிவுக்கட்டணம் அறவிடப்பட்டுள்ளது. குறித்த இடத்திலிருந்து 77 ஆயிரம் ரூபா பணமும், தராசு, கண் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எழுத்துக்கள் மற்றும் இலக்க பட்டியல்கள் இரண்டு, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இலவசமாக தொழில்வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக குறிப்பிடும் பதாகைகள் என்பவற்றையும்அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலையவாய்ப்பு பணியகத்தின் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக தொழில்வாய்ப்புக்களுக்காக இளைஞர்களை ஒன்றுதிரட்டிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்கள் இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 28ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.