ஆர்ப்பாட்டக்காரர்கள் வசமுள்ள ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியேற அவர்கள் தீர்மானித்துள்ளனர். ஊடக சந்திப்பொன்றை நடத்தி அவர்கள் இது தொடர்பில் அறிவித்துள்ளனர். கொழும்பு பிலவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று உள்நுழைந்தனர். காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட களத்திலிருந்து எதிர்ப்பை வெளியிட்ட வண்ணம் பேரணியாக பிரதமர் அலுவலக வளாகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பயணித்தனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் கண்ணீர் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
எவ்வாறெனினும் அவர்கள் சில மணித்தியாலங்களின் பின்னர் பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அங்கு ஏற்பட்ட அமைதியின்மையின் போது 39 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஆர்;ப்பாட்டத்தின் போது நோய் நிலைமைக்கு உள்ளான இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
நாட்டில் நிலவும் நிலைமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்திற்கு நுழையும் பொல்துவ முச்சந்தியில் நேற்று பிற்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்தது. மேலும் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் இணைந்ததையடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. குறித்த நிலையை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு பிரிவினர் நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று இரவு பொல்துவ சந்தியில் தங்கியிருந்தனர். வீதித்தடைகளை அவர்கள் முன்னோக்கி செல்ல முயற்சித்ததையடுத்து பாதுகாப்பு பிரிவினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகங்களை மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி வீதித்தடைகளை நீக்க நடடிக்கை எடுத்தனர். எவ்வாறெனினும் தொடர்ந்தும் அங்கு அமைதியற்ற சூழல் காணப்பட்டமையினால் பாதுகாப்பு பிரிவினர் குறித்த பிரதேசத்தில் மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுத்தனர்.
பொல்துவ முச்சந்தியில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது காயமடைந்த 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் பத்தரமுல்லை பொல்துவ முச்சந்தியில் கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டப்பல் ஒருவர் மற்றும் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டப்பல் களுத்துறை பொலிஸ் பயிற்ச்சி கல்லூரியில் இணைந்து பணியாற்றுபவராவார். காயமடைந்த மற்றைய இராணுவ வீரர்கள் வெல்லவாய பிரதேசத்தின் இராணுவ முகாமில் இணைந்து சேவையாற்றுபவரென பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் 60 ரவைகள உள்ளிட்டவையும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் அபகரிக்கப்பட்டுள்ளது.