இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணி தொடரை 3 – 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. இலங்கை அணியின் தொடர் வெற்றியானது இருதரப்பு தொடரொன்றில் அவுஸ்திரேலிய அணியை 30 வருடங்களின் பின்னர் வெற்றிக்கொண்ட வரலாற்று பதிவாக மாறியுள்ளது. தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணி நேற்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி இலங்கை ரசிகர்களுக்கு வரலாற்று வெற்றியை பரிசளித்துள்ளதோடு, மகிழ்ச்சியையும் வழங்கியுள்ளனர்.
நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ச்சரித் அசலங்க தனது கன்னிச்சதத்தை பதிவுசெய்தார். நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அவர் 110 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு, தனஞ்சய டி சில்வா 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் மிச்சல் மார்ஸ், பெட் கமின்ஸ், மெத்யூ குஹுனமென் ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கட்டுக்களை கைப்பற்றியதோடு, க்ளென் மெக்ஸ்வெல் ஒரு விக்கட்டை வீழ்த்தினார்.
இந்நிலையில் 259 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இறுதி பந்து வரை ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. சகல விக்கட்டுக்களையும் இழந்து 254 ஓட்டங்களையே அவுஸ்திரேய அணி வீரர்கள் பெற்றுக்கொண்டனர். இறுதி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க 14 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இறுதி பந்தில் 5 ஓட்டங்கள் தேவையென்ற நிலையில் விக்கட் வீழ்த்தப்பட்டது. அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் டேவிட் வோர்னர் 99 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு, பெட் கமின்ஸ் 35 ஓட்டங்களை பெற்றார். இலங்கை அணியின் பந்துவீச்சில் ச்சாமிக்க கருணாரத்ன, தனஞ்சய டி சில்வா, ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினர். போட்டியின் ஆட்டநாயகனாக தனது கன்னி சதத்தை பதிவுசெய்த ச்சரித் அசலங்க தெரிவுசெய்யப்பட்டார். இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 5வதும், இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் 24ம் திகதி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.