களுத்துறை சிறைச்சாலைக்கு போதைப்பொருள் மற்றும் கையடக்கத்தொலைபேசியை சூட்சுமமான முறையில் எடுத்துச்செல்ல முற்பட்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். களுத்துறை குற்றவிசாரணை பிரிவினரால் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காலி பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபர் களுத்துறை கலஹமுல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளதாகவும், அவர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் சந்தேகத்திற்கிடமாக வகையில் பயணித்த நிலையில், பொலிஸார் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன்போது இரண்டு பாதணிகளில் சூட்சுமமான முறையில் சந்தேக நபர் போதைப்பொருளையும், கையடக்கத்தொலைபேசியையும் எடுத்துச்செல்ல முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 6 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் புகையிலை, இரண்டு கையடக்கத்தொலைபேசிகள் என்பன சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னணி போதைப்பொருள் வர்த்தகரொருவருக்கு வழங்குவதற்காகவவே சந்தேக நபர் அவற்றை எடுத்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.