35 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலுடன் நாளைய தினம் கப்பலொன்று நாட்டுக்கு வருகைத்தரவுள்ளது. டீசல் அடங்கிய கப்பல் எதிர்வரும் சனிக்கிழமையே நாட்டுக்கு வருகைத்தருமென எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
டீசல் மற்றும் பெற்றொல் தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். பெற்றோல் அடங்கிய கப்பல் நாளை வருகைத்தந்தாலும், நாளை மறுதினமே விநியோகத்தை சாதாரண நிலையில் முன்னெடுக்க முடியுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்கள் வருகைத்தந்ததன் பின்னர், அத்தியாவசிய சேவை, விவசாயம், மீன்பிடி ஆகிய துறையினருக்கு முன்னுரிமையின் அடிப்படையில் எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் நாட்டின் சகல பாகங்களிலுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் நாட்கணக்கில் காத்திருக்கின்றனர்.