பயணிகளை கவரும் விதத்தில் பொதுப்போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு குழு கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரயில் மற்றும் பஸ் வண்டிகளுக்கு தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களின் மூலம் இரவு நேரத்தில் தனியார் பஸ் வண்டிகளுக்கு எரிபொருள் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Park and Drive திட்டத்தை மேம்படுத்துவதற்காக அதன் கட்டணத்தை குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட சில ரயில் நிலையங்களுக்கு அருகில் வாகன தரப்பிட வசதிகள் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் வண்டிகளுக்கு இடையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒன்றிணைந்த நேர அட்டவணையை குறுந்தூர சேவைக்கும் அமுல் செய்ய யோசனை முன்வைக்கப்பட்டது. அலுவலக நேரத்தை கருத்திற்கொண்டு புதிய ரயில் சேவைகளை ஆரம்பிக்கவும் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள ரயில்களுக்கு மேலதிக பெட்டிகளை இணைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.