காலி முகத்திடல் போராட்டக்களத்திலுள்ளவர்கள் தமது யோசனைகள் மற்றும் கோரிக்கைகளை மக்கள் மயப்படுத்தியுள்ளனர். காலிமுகத்திடலுக்கு அப்பால் எனும் பெயரில் போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளன.
கடும் மழைக்கு மத்தியிலும் காலி முகத்திடலில் இன்று போராட்டம் தொடர்கின்றது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நேற்று மாலையும், பல்துறை சார்ந்த பெரும் எண்ணிக்கையிலானோர் காலிமுகத்திடலுக்கு வருகை தந்திருந்தனர். இன்றும் அதிகளவானோர் போராட்ட களத்தில் இருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை காலிமுகத்திடலுக்கு அப்பால் எனும் தொனிப்பொருளில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் மற்றும் கோரிக்கைகளில் 8 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தலைமையிலான ராஜபக்ஷ குழுவினர் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும். புதிய இடைக்கால ஜனாதிபதி மற்றும் பிரதமர் நியமிக்கப்பட வேண்டும்.
குறுகிய காலத்திற்கு இடைக்கால அரசாங்கம். அதில் ஊழல் குற்றச்சாட்டுடையவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படக்கூடாது.
6 மாத காலத்திற்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இரத்து செய்யப்பட வேண்டும். இதற்காக அரசியல் யாப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
ஜனநாயகத்தை பலப்படுத்தும் நோக்கில் பிரஜைகள் சபை முறையொன்று உருவாக்கப்பட வேண்டும்.
பொருளாதார சமூக பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காணப்பட வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடை நிவர்த்திக்க, மக்கள் நலன்சார் வரவு செலவு திட்டம் முன்மொழியப்பட வேண்டும்.
ராஜபக்ஷ குடும்பத்தினர் உட்பட சகல மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான உரிய கணக்காய்வு செய்யப்பட வேண்;டும். பிழையான வருமானத்தின் மூலம் ஈட்டப்பட்ட நிதி வெளிநாட்டில் முதலீட்டு செய்யப்பட்டிருக்குமாயின் அவற்றை மீள பெற ராஜதந்திர தலையீடு மேற்கொள்ளப்படல் வேண்டும்.
2003ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் ஊழல் எதிர்ப்பு பிரகடனத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
சட்டத்தை பிழையாக பாவித்து பிரஜைகளின் உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறும் சகல செயற்பாடுகளையும் உடனடியாக நிறுத்துவதற்கு தேவையான சட்ட திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும்.
வாழ்வதற்கான உரிமை மற்றும் சகல தேர்தல்களையும் நீதியாகவும், நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்துவதற்கான சட்ட திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். குறிப்பாக பொதுமக்களின் அலைவரிசைகளை பயன்படுத்தும் சகல ஊடகங்களையும் சுயாதீனமாக மேற்பார்வை செய்வதற்கான அதிகாரம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட வேண்டும்.
அடுத்து வரும் தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழுங்கு செய்யும் வகையில் தேர்தல் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் யோசனைகளை முன்வைத்துள்ளனர்.