இன்று நள்ளிரவு 12 மணியிலிருந்து நாளை நள்ளிரவு வரை புகையிரதங்கள் சேவையில் ஈடுபடாமல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.விதானகே தெரிவித்துள்ளார். புகையிரத பயணிகள் எவரும் புகையிரத நிலையங்களுக்கு வருகை தர வேண்டாமெனவும், வருகை தந்து வீண் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டாமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் துறைமுகம், கனியவள கூட்டுத்தாபனம், நீர், மின்சாரம், போக்குவரத்து ஆகிய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் பணிப்புறக்கணிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லையென ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தெரிவித்துள்ளனர். அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒரு சில தொழிற்சங்கள் குறிப்பிட்டுள்ளன. பணிப்புறக்கணிப்பின் ஊடாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதோடு, நாடு பின்னடைவை சந்திக்குமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில், பஸ் போக்குவரத்து இடம்பெறாவிட்டால் அதன் ஊடாக பாதிக்கப்படுவது சாதாரண கீழ்தட்டு மக்களே என சுட்டிக்காட்டியுள்ளார். செல்வந்தர்கள் பஸ் வண்டிகளில் பயணிப்பதில்லை. அதன் காரணமாக தமது பங்களிப்பு இல்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.