நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பினால் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்பு..
Related Articles
நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும், அரச நிறுவனங்களிலும் இன்றையதினம் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. அரச, அரை அரச நிறுவனங்களை போன்று தனியார் துறை ஊழியர்களும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்காரணமாக நாளாந்த செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையினால் பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தரவில்லை. எனினும் வவுனியாவில் ஒருசில பாடசாலைகளில் ஆசிரியர்கள் வருகை தந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையினால் ஒருசில புகையிரதங்களே சேவையில் ஈடுபட்டிருந்தன. எனினும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்வண்டிகள் சேவையில் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருந்தது. பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபட்டிருந்தாலும், பயணிகளின் வருகை இன்மையை அவதானிக்க கூடியதாகவுள்ளது. பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்த போதும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வழமைப்போன்று முன்னெடுக்கப்படுகின்றன. அத்தோடு துறைமுகம், விமான நிலையங்கள் என்பவற்றின் செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை காணக்கூடியதாகவுள்ளது.