பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது சமூக வலைத்தளத்தில், குறிப்பிட்டிருந்த பதிவொன்றுக்கு , பாதுகாப்பு செயலாளர் பதிலளித்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரை குறிப்பிட்டு, தனது சமூக வலைத்தளத்தில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்தொன்றை பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அமைதியாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளவர்களுக்கு எதிராக இராணுவ அதிகாரத்தை பயன்படுத்துவது தொடர்பில் எந்தவொரு திட்டமும் இல்லையென பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தியுள்ளார். ஜனநாயக முறையில் முன்னெடுக்கப்படும் அமைதியான போராட்டங்களை அடக்குவதற்குவதற்கென படையினரை பயன்படுத்த, பாதுகாப்பு பிரிவு தயாராக இல்லையெனவும் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்முறைகள் இடம்பெறும் பட்சத்தில் நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் நோக்கிலும், அனைத்து இலங்கையர்களிடையே சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்கும் பொலிஸார் கோரிக்கை விடுத்தால் மாத்திரமே, இராணுவத்தினர் அவ்வாறான உதவிகளை வழங்குவார்கள் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடையே, புலனாய்வுப் பிரிவினரை அனுப்பி கலகத்தை உருவாக்கி, அதனை கலைக்க முப்படையினரை பயன்படுத்தும் யோசனை இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளில் உண்மையில்லை என்றும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமைதியான ஆர்ப்பாட்டத்தினூடாக , அரச சொத்துக்கள் அல்லது தனியார் சொத்துக்களை அழிப்போருக்கும், அவர்களுக்கு தலைமை தாங்குவோருக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுப்பார்கள் என பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.