இன்றும் நாளையும் டீசல் பெற்றுக் கொள்வதற்காக சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டாமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தாலும், அதிலுள்ள எரிபொருளை நிரப்பு நிலையங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு காலம் தேவை என்பதால், அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
நாட்டின் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பகல் மற்றும் இரவு வேளையில் தொடர்ந்தும் மக்கள் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாகவுள்ளது. நீண்ட நேரமாக வரிசையில் நின்ற பஸ் வண்டி உரிமையாளர்கள் நேற்றிரவு பத்து மணியளவில் ஹொரண பாணந்துறை பிரதான வீதியை மறித்ததால் வாகன நெரிசல் ஏற்பட்டது. பத்து மணிக்கு பின்னர் குறித்த எரிபொருள் நிலையம் மூடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர்கள் இவ்வாறு வீதியை மறித்தனர். ஹொரண பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்ததனால் அங்கு நிலைமை சுமுகமானது.
இதேவேளை மீரிகம பல்லேவெல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வீதியை மறித்து, டிப்பர்ரக வாகன சாரதிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்லேவல பொலிசார் வருகை தந்து பிரச்சினையை அமைதியாக தீர்த்து வைத்தனர்.
நேற்றைய தினம் தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்த 37 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பலிலிருந்து டீசலை தரையிறக்க முடியாது போனதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார். இதனால் இன்றும் நாளையும் டீசல் பெற்றுக் கொள்வதற்காக சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்க வேண்டாமென கூட்டுத்தாபனம் மக்களி;டம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் அத்தியாவசிய சேவைகளுக்காக டீசல் தொடர்ந்தும் விநியோகிக்கப்படும். பெற்றோல் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லையென்பதால் மக்கள் வழமை போன்று பெற்றோலை பெற்றுக் கொள்ள முடியுமென பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கம் இந்தியன் ஒயில் கம்பனியிடமிருந்து 6 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது, நாளைய தினம் இந்திய நிதியொதுக்கீட்டின் கீ’ழ் நாட்டுக்கு கிடைக்கவுள்ள டீசல் தொகையுடன் எரிபொருள் கப்பல் வருகை தரும் வரை குறித்த டீசல் தொகை கொள்வனவு செய்யப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது. குறித்த டீசல் தொகையை மின் உற்பத்தி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.