இரு தரப்பு பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் நோக்கில் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்கென வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரின் விஜயத்தின் போது இந்திய மற்றும் இலங்கைக்கு இடையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 6 கைச்சாத்திடப்பட்டுள்ளன.
3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அழைப்பிற்கு இணங்க நாட்டிற்கு வருகை தந்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்றை தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை , சந்தித்தார். வெளிவிவகார அமைச்சரின் வருகை குறித்து ஜனாதிபதி தனது மகிழ்ச்சியை வெளியிட்டார். உணவு , மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இவ்வருடத்தில் 2.5 பில்லின் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியமை தொடர்பில் ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்தார்.
இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம் இணையத்தளம் ஊடாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்தியாவில் பௌத்த வழிபாடுகளை இலங்கை மக்களிடையே பிரபல்யப்படுத்துவதற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.
இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடினார். கொழும்பில் இடம்பெற்ற குறித்த சந்திப்பு தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்ட வெளிவிகார அமைச்சர் இலங்கையின் தற்போதய பொருளாதார நிலை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க இந்திய அரசாங்கம் தொடர்;;ச்சியாக நடவடிக்கை எடுக்குமென வெளிவிவகார அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
அதனையடுத்து இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிசுக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு தரப்புக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
அதற்கமைய இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்கு அமைய இலங்கை டிஜிட்டல் அடையாள வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல், கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மத்திய நிலையமொன்றை ஸ்த்தாபித்தல், யாழ்ப்பாணத்திற்கு அப்பால் உள்ள 3 தீவுகளை கலப்பு மின்னிலைய திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அதேபோல் நாட்டின் மீன்பிடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல், காலி மாவட்டத்தின் 200 பாடசாலைகளுக்கு நவீன கணணி வசதிகளுடன் கூடிய ஆய்வகங்களை அமைத்தல், சுஷ்மா சுவராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச ராஜதந்திரிகளை பயிற்சி நிறுவனத்திற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியதாகவும் இந்திய உயர்ஸ்த்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் இந்திய உயர்ஸ்த்தானிகராலயம் தெரிவித்துள்ளது.