இவ்வாரத்தில் 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்தையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஓமானின் கடனுதவியின் கீழ் 3 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பல் நேற்றிரவு நாட்டை அண்மித்தது. குறித்த கப்பல் தற்போது தல்தியவத்த கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ளதுடன் தரம் தொடர்பான பரிசோதனையின் பின்னர் கெரவலப்பிட்டிய லிட்ரோ எரிவாயு முறையத்திற்கு குறித்த எரிவொயு தொகை தரையிறக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்புலத்தில் தொடர்ந்தும் நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு கொள்வனவிற்கென மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். உரிய எரிவாயு தொகை கிடைக்கப்பெறாமையினால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் தொடர்ந்தும் நீடிப்பதாக சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் லிட்ரோ எரிவொயு சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்ட வந்த தம்பதியர் பிலியந்தலை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனிடையே பாவனையாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்ட அமைப்பு முன்வைத்த முறைப்பாட்டிற்கமைய நுகேகொடை எரிபொருள் நிரப்பு நிலையம் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தரமான அளவீட்டு அலகுகள் பயன்படுத்தப்படாமை தொடர்பில் தெரியவந்தது. அவற்றை உடனடியாக நிலையத்தில் பொருத்துமாறு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.