வானொலி அரச விருது விழாவில் இம்முறை வசந்தம் , லக்ஹண்ட வானொலிகளுக்கு 4 விருதுகள்
Related Articles
வானொலி அரச விருது வழங்கும் விழா நேற்றைய தினம் மருதானை எல்பின்ஸ்டன் கலையரங்கில் இடம்பெற்றது. இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைமையில் விருது வழங்கும் விழா இடம்பெற்றது. சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் வசந்தம் எப்எம், லக்ஹண்ட வானொலிகளில் பலரும் விருந்துக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் 4 விருதுகளும், இரண்டு பிரிவுகளில் ஊக்குவிப்பு சான்றிதழ்களும் கிடைக்கப்பெற்றுள்ளது.
வசந்தம் எப்எம் வானொலியின் பரவசிவம் டார்வினுக்கு சிறந்த ஒலி கலவைக்கான விருது கிடைக்கப்பெற்றுள்ளது. அத்தோடு முருகதாஷன் திருவேரகன் சிறந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கான ஊக்குவிப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொண்டார். அத்தோடு வசந்தம் எப்எம் வானொலியின் அறிவிப்பாளர்களான என்.புவனேஸ்வரராஜா, அனோஜன் ஆகியோர் வேறு பிரிவுகளில் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.
இதேவேளை லக்ஹண்ட வானொலியின் சிரேஷ்ட நிறைவேற்று தொடர்பாளர் இந்திரசிறி சுரவீர சிறந்த ஆராச்சிபூர்வமான வானொலி நிகழ்ச்சி மற்றும் சிறந்த வானொலி அறிப்பாளர் ஆகிய இரண்டு பிரிவுகளில் இரண்டு விருதுகளை பெற்றுக்கொண்டார். சிறந்த வானொலி செய்தி வாசிப்பாளருக்கான விருது லக்ஹண்ட வானொலியின் செய்தி பிரிவை சேர்ந்த வெனுரி கின்ஹெலியவிற்கு கிடைக்கப்பெற்றது. சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான விருது லக்ஹண்ட வானொலியின் உதவி முகாமையாளரான மயூரி லியனகேவிற்கு கிடைக்கப்பெற்றது. அத்தோடு லக்ஹண்ட வானொலியின் ஒலிபரப்பான சிங்க ராவைய நிகழ்ச்சிக்காக சிறந்த ஒலிக்கலவைக்காக அனோஜா சமரநாயக்கவிற்கும், அரச வானொலி விருது கிடைக்கப்பெற்றது. அத்தோடு சிறந்த வானொலி அறிவிப்பாளருக்கான ஊக்குவிப்பு சான்றிதழை லக்ஹண்ட வானொலியின் செய்தி பிரிவை சேர்ந்த சமீர காரியவசம் பெற்றுக்கொண்டார். வசந்தம் மற்றும் லக்ஹண்ட வானொலிகள் தொடர்ச்சியாக வானொலி அரச விருது வழங்கும் விழாவில் விருதுகளை பெற்று வருகின்றமை விசேட அம்சமாகும்.